செந்தமிழ்சிற்பிகள்

ஜெகவீரபாண்டியனார் (1886-1967)

 

ஜெகவீரபாண்டியனார் (1886-1967)

கல்வி கற்க முடியாத சூழல் வாட்டியபோதிலும் ஆத்திசூடிகொன்றைவேந்தன், மூதுரை தாயுமானவர் பாடல் முதலான நூல்களையும் வேதாந்த நூல்களயும் ஆங்கில மொழியையும் தாமாகவே படித்துப் புலமை பெற்றவர்.19ம் வயதிலேயே "ஆசிரியர்" நிலைக்கு உயர்ந்தவர். நாநலம் மிக்கவர். சிறந்த புராணச் சொற்பொழிவாளர். தமது இல்லத்திற்குத் "திருவள்ளுவர் நிலையம்என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்கு "வாசுகி அச்சகம்" என்றும் பெயரிட்டவர். தம்நூலில் ஓரிடத்திலும் அச்சுப்பிழை வாராமல் பார்த்துக் கொண்டவர்.. மாசிலா மணிமாலை , அணி அறுபது , தருமதீபிகை, திருக்குறட் குமரேச வெண்பா ,வீரபாண்டியம், இந்தியத் தாய்நிலை , உலக உள்ளங்கள், கம்பன் கலைநிலை, அகத்திய முனிவர் , கவிகளின் காட்சி, தமிழர் வீரம் , பாஞ்சாலங் குறிச்சி வீரசரித்திரம் போன்ற பல நூல்களை எழுதியவர். "திருக்குறட் குமரேச வெண்பா" என்ற நூலில் ஒவ்வொரு குறளுக்கும் அதற்கேற்றவாறு கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் குறளோடு மேலும் இரண்டு அடிகள் சேர்த்து முழு வெண்பாவாகப் பாடியதோடு அதற்கான முழு விளக்கத்தையும் தந்தவர்.

 கவிராச பண்டிதர் (10.3.1886 – 17.6.1967) எனப் போற்றப்பட்ட செகவீரபாண்டியனார் தென்னகத்தில், கோயில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட ஊர் மணியாச்சி. இவ்வூருக்கு அருகில் உள்ளது ஒட்டநத்தம். இதை "சின்னப் பாஞ்சாலங்குறிச்சி" என்றும் கூறுவர். இவ்வூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்த குடும்பத்தில் தோன்றிய பெருமாள்சாமி என்பவருக்கும் ஆவுடையம்மைக்கும் 10.3.1886 ல் பிறந்தவரே கவிராசபண்டிதர் செகவீரபாண்டியனார். 17.6.1967 ல் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவம் பலனின்றி இறைவனடி சேர்ந்தார். செகவீர பாண்டியனார் தம் 27 ஆம் வயதில் வெள்ளைத்தாய் என்னும் மங்கையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். தென்பாண்டி நாட்டில் பல ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றி வந்தார். ஆனாலும் இத்தகைய பேச்சுகள் பயனின்றிப் போகும் என்று உணர்ந்தவர், நூல் எழுதுவதே தக்க பணி என்று எண்ணினார்.

மதுரை மேலமாசி வீதியில் தங்கி, தாம் வசித்த இல்லத்திற்குத் "திருவள்ளுவர் நிலையம்" என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்குவாசுகி அச்சகம்என்றும் பெயரிட்டார். அச்சுக் கோர்ப்பது முதலான பணிகளைத் தாமே செய்தார். பாண்டியனார் கவி புனைவதில் வல்லவர்.

பெரும்பாலும் பாடல்கள் இயற்றும் புலவர்கள் அப்பாடல்களுக்கு உரை எழுதுவதில்லை; பின்னால் வரும் புலவர்களே எழுதியுள்ளனர்.

கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் 1330 குறட்பாக்களையும் வைத்து மேலே இரண்டடியில் திருக்குறளின் கருத்துகளுக்குப் பொருத்தமான சரிதங்களை இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்தும், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் சேர்த்து, பொருத்தமான விரிவுரை (மாபாடியம்) செய்திருக்கிறார்.

கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார், ’மனிதன் நிலை முதல் அதிகாரமாக, வீடு என்ற தலைப்பை நூறாவது அதிகாரமாக வைத்து,’ 100 அதிகாரங்களில், அதிகாரத்திற்குப் 10 பாடல்கள் வீதம் தரும தீபிகை என்ற நூலும், 60 பாடல்கள் கொண்ட அணியறுபது என்ற நூலும், கம்பன் கலைநிலை என்ற உரைநடை நூலும், பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் என்ற நூலும் எழுதியிருக்கிறார்.

தரும தீபிகை

தரும தீபிகை என்னும் இந்நூல் அருமையான பல உறுதி நலங்களை யுடையது. இந்நிலவுலகில் நிலவுகின்ற பலகோடி உயிரினங்களுள் மனிதன் மிகவும் தலைசிறந்து நிற்கின்றான். அந்நிலை உணர்வொளியால் நன்கு உறுதி பெற்றுள்ளது. தன் கண் எதிரே காணாதவற்றையும் கருதி யுணருங் திறம் மனித வுருவில் மருவி யிருக்கின்றது.

சென்றதையும் நிகழ்வதையும் எதிர்வதையும் எண்ணி ஆராய்ந்து நுண்ணிய கருமங்கள் செய்து புண்ணியங்கள் புரிந்து புனித நிலையை அடைய மனிதன் இனிது முயல்கின்றான். முயன்றும் கருதியது கை கூடாமல் மறுகியுழல்கின்றான். இன்பமே விரும்பும் இயல்புடைய மக்கள் துன்பமடைந்து துடித்தயர்கின்றனர். அதற்குக் காரணம் வினை என விளம்பி வெருண்டு நிற்கின்றார்.

 வினை என்பது மனம் மொழி மெய் என்னும் மூன்று நிலைகளில் தோன்றி விளைகின்றது. இம் முக்கரணங்களும் நன்மையில் படிந்துவரின் நல்வினையாம்; தீமையில் தோய்ந்துவரின் தீவினையாம், நல்வினை இன்பம் பயக்கும்; தீவினை துன்பம் விளைக்கும்.

ஆகவே இன்பம் வேண்டுவோர் துன்ப மூலங்களான தீய வினைகளை யாண்டும் தீண்டலாகாது. தூய செயல்களையே தொடர்ந்து பழகி வர வேண்டும். ஒருவனுடைய கருமம் புனிதமானால் அவன் கருமவானாய்த் தழைத்து இருமை இன்பங்களையும் எளிதே எய்துகின்றான். இத்தகைய விதிவிலக்குகளை விளக்கி உயிர்களை உத்தம நிலையில் உய்த்தலால் அற நூல்கள் உயிர்க்கு உறுதியான உயர்நூல்களாக மதிக்கப்பட்டுள்ளன.

பெறுதற்கு அரிய சிறந்த மக்கட் பிறவியை அடைந்தும் இப்பேற்றின் அருமையை மறந்து வெம்மை நெறிகளில் உழந்து புன்மை புரிந்து தவிக்கும் மனுக்குலத்திற்கு இனித்த முறையில் செய்யும் திறங்களை விளக்கி உய்யும் வகைகளை யுணர்த்திக் கால நிலைகளுக்கு ஏற்ப நூல்கள் பல தோன்றி வருகின்றன.

அற நூல்களும் நீதி நூல்களும் பண்டு தொட்டே நமது தமிழ் மொழியில் மிகவும் பெருகி வந்துள்ளன. ஆயினும், இந்நூல் இனியவளஞ் சுரந்து புதிய மணங் கமழ்ந்து அரிய நலங்கள் பல மலிந்து புத்தொளி மிகுந்து தத்துவ நோக்குடன் தலை சிறந்துள்ளது. இவ் வுண்மையை எவரும் இதனுள் உய்த்துணர்ந்து கொள்ளலாம். உணர்வின் அளவு உண்மை தெளிவாகி வருகிறது.

இந்த நூல் விளைந்து வந்த நிலையை எண்ணுந்தோறும் என் உள்ளம் இன்பமீதுார்கின்றது. திருக்குறட் குமரேச வெண்பா என்னும் அரிய பெரிய நூலை நான் எழுதி முடித்தபின் என் கருத்துள் தோன்றிய எண்ணங்களை ஒரு புண்ணிய நூலாகப் புனைந்து வந்தேன். மேற்குறித்த பெரு நூலை வெளியிடுங்கால் இதிலிருந்து சில பாடல்கள் அதனிடையே வெளி வர நேர்ந்தன. அவற்றைக் கண்ட அறிஞர் பலர் ஆர்வமுடன் உவந்து பாராட்டி நூல் முழுவதும் வேண்டும் என விழைந்து எழுதினர். ஏறக் குறையப் பத்தாண்டுகளாக இடையிடையே அந்த எழுத்துக்கள் அழுத்தமாய் வந்து கொண்டிருக்கின்றன. அந்த அன்பர்களுடைய உரிமையான வேண்டுகோள்களே இது பொழுது இந்நூல் உரையுடன் வெளி வருதற்குத் தூண்டுகோல்களாயின.

அற நலங்களை யுணர்த்தி அறிவொளி பரப்பி அறியாமையாகிய அக இருளை நீக்கி யாண்டும் உயர்வருளும் இயல்பினது ஆதலால் இது தரும தீபிகை என வந்தது. மனிதனிலை, உடல்நிலை, மனநலம், இனநலம், சீர்மை, சீலம் முதலிய நூறு அதிகாரங்களை யுடையது. அதிகாரம் தோறும் பத்துப் பாக்கள் அமைந்தது.

இந்நூல் முழுவதும் நேரிசை வெண்பாவால் நிறைந்துள்ளது. கவிகளெல்லாம் நெளிவும் தெளிவும் உடையனவாயினும் கருத்துக்களின் அருமை பெருமைகளை அழகுற உணர்த்தி உள்ளுறை நயங்களைத் தெள்ளிதின் விளக்கிக் கலைநலங்கள் கனிந்துள்ளமையால் இவ்வுரை எல்லார்க்கும் இதமாய் இனிமை பயந்து வருமென்று நம்புகின்றேன்.

இந்நூலும் உரையும் ஞாலம் இன்புற நலம் பல தந்து என்றும் நின்று நிலவும்படி எம்பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து நிற்கின்றேன்.